சென்னை டூ குஜராத்.. என்றும் திலக் வர்மாவின் போட்டி இவர்தான்.. யார் இந்த தமிழக வீரர் சாய் சுதர்சன்?

சென்னை டூ குஜராத்.. என்றும் திலக் வர்மாவின் போட்டி இவர்தான்.. யார் இந்த தமிழக வீரர் சாய் சுதர்சன்?

டெல்லி: டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் 48 பந்துகளில் 62 ரன்கள் விளாசி குஜராத் அணியின் வெற்றிக்கு முக்கியக் காரணமாக அமைந்ததோடு, ஒரே நாளில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களால் அதிகமாக தேடப்படும் வீரராக உருவாகியுள்ள சாய் சுதர்சன். இந்த நிலையில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சனின் கிரிக்கெட் பயணத்தை பற்றி பார்க்கலாம்.


ஒரேயொரு இன்னிங்ஸ் மூலம் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை தான் யார் என்பதை தேட வைத்துள்ளார் தமிழ்நாடு வீரர் சாய் சுதர்சன். டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் டாப் ஆர்டரில் களமிறங்கிய சாய் சுதர்சன், அடுத்தடுத்து முக்கிய விக்கெட்டுகள் சரிந்த போதும் நிதானமாக எந்த பிரஷரும் இல்லாமல் ஆடி அரைசதத்தை அடித்தார்.


அதுமட்டுமல்லாமல் நீண்ட நேரம் களத்தில் நின்று குஜராத் அணிக்கு வெற்றியை தேடி கொடுத்துள்ளார் சாய் சுதர்சன்.


இவரது ஆட்டத்தை பார்த்து சுனில் கவாஸ்கர் முதல் டேவிட் வார்னரை வரை பலரும் புகழ்கிறார்கள். 21 வயது பையனுக்கு இவ்வளவு திறமையா என்று வியக்கிறார்கள். ஆனால் 21 வயதான சாய் சுதர்சனின் பயணம் மிக நீண்டது. வாலி பால் வீராங்கனையான தாய்-க்கும், விளையாட்டு வீரரான தந்தைக்கும் பிறந்தவர் தான் சாய் சுதர்சன்


அதனால் சிறு வயது முதலே விளையாட்டில் ஈடுபடுவதற்கு எந்த தடையும் இல்லை. இதனால் இயற்கையாகவே சாய் சுதர்சனுக்கு கிரிக்கெட் மீது பற்று வந்தது.


இன்னும் சொல்லப் போனால் மும்பை அணிக்காக ஆடிய திலக் வர்மா, குஜராத அணிக்காக ஆடி வரும் சாய் சுதர்சன் உள்ளிட்ட அனைவரும் யு-14 கிரிக்கெட் தொடர்களில் எதிர் எதிர் அணிகளாக விளையாடியவர்கள். அப்போதைய தென் மண்டல யு-14 தொடரில் அதிக ரன்கள் விளாசியவர்கள் பட்டியலில் திலக் வர்மா முதலிடம் பிடித்தார் என்றால், சாய் சுதர்சன் 4வது இடம் பிடித்தார்.


முதலிடத்தில் வந்தவருக்கே இங்கு பேரும், புகழும். மீதமிருப்பவர்களை இந்த உலகம் கண்டுகொள்ளாது. அங்கிருந்துதான் சாய் சுதர்சனின் உண்மையான பயணம் தொடங்கியது.


வினோத் மன்கட் டிராபி, யு-19 சேலஞ்சர் டிராபி என்று அத்தனை தொடர்களிலும் தனது முத்திரையை பதித்துக் கொண்டே வந்தார் சாய் சுதர்சன். அப்போதுதான் சாய் சுதர்சனின் திறமையை ரசிகர்களுக்கு காட்டுவதற்காக ஒரு வாய்ப்பு டிஎன்பிஎல் மூலமாக கிடைத்தது.


சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணிக்காக ஓராண்டு பெஞ்சில் அமர வைக்கப்பட்ட பின், அடுத்த ஆண்டு கோவை லைகா கிங்ஸ் அணிக்காக ஒப்பந்தம் செய்யப்பட்டார். 19 வயது சாய் சுதர்சன் என்ன செய்துவிடுவார் என்று யோசித்த போது, சேலம் அணிக்கு எதிரான போட்டியில் பொளந்து கட்டிவிட்டார் என்றே கூறலாம். 43 பந்துகளில் 87 ரன்கள்.. அதில் 5 சிக்சர் மற்றும் 8 பவுண்டரிகளும் அடங்கும்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *