சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் வெளியீடு; 99.37% தேர்ச்சி
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று (ஜூலை 30-ம் தேதி) அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், 99.37% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
நாடு முழுவதும் கரோனா பரவல் காரணமாக சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவருக்கும் தேர்ச்சி வழங்கப்பட்டது. அதில், மாணவர்களின் 12ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து 40% மதிப்பெண்கள், 10 மற்றும் 11ஆம் வகுப்பில் நடந்த தேர்வுகளில் இருந்து தலா 30% மதிப்பெண்களை எடுத்து மொத்த மதிப்பெண்கள் கணக்கிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இறுதி மதிப்பெண் கணக்கிட்டு பதிவேற்றம் செய்யும் பணிகள் முடிவடைந்தன.
மாணவர்கள், தங்களின் உயர்கல்வி சேர்க்கையில் சிரமங்களை எதிர்கொள்ளாமல் இருக்கும் பொருட்டு, சாத்தியமான வகையில் குறைந்தபட்ச காலத்துக்குள் விரைவாகத் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்றும் சிபிஎஸ்இ சார்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தனித் தேர்வர்களுக்கும் தங்களுக்கு வழங்கப்பட்ட மதிப்பெண்கள் போதுமானதாக இல்லை என்று கருதும் மாணவர்களுக்கும் மீண்டும் பொதுத் தேர்வு எழுத வாய்ப்பு அளிக்கப்படும். கரோனா சூழல் சீரடைந்தபிறகு அந்தத் தேர்வுகள் நடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு ஜூலை 13-ம் தேதி பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாகின. 2019-ம் ஆண்டைக் காட்டிலும் 5.38% சதவீதம் அதிகமாக 88.78% பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இந்நிலையில் சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத் தேர்வை எழுதப் பதிவு செய்திருந்த 14.5 லட்சம் மாணவர்களுக்குத் தேர்வு முடிவுகள், இன்று (ஜூலை 30-ம் தேதி) மதிய, 2 மணிக்கு அறிவிக்கப்பட்டுள்ளன.
இதில், மொத்தம் 99.37% பேர்தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் மாணவிகள் 99.67 சதவீதமும், மாணவர்கள் 99.13 சதவீதமும் மூன்றாம் பாலின மாணவர்கள் 100 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மொத்தம் 14,088 பள்ளிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் 65,184 மாணவர்களின் தேர்வு முடிவுகள் அறிவிக்கப்படவில்லை.
மாணவர்கள் தங்களின் தேர்வு முடிவுகளைக் காண https://cbseresults.nic.in/ என்ற இணைய முகவரியைப் பார்க்க வேண்டும்.
இந்த ஆண்டு இறுதி மதிப்பெண் பட்டியல் வெளியானபிறகு அதில் திருத்தம் தேவைப்படும் மாணவர்களுக்காகத் தனி குறை தீர்க்கும் மையம் அமைக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.