எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை.. சபாநாயகரை சந்தித்த எஸ்.பி.வேலுமணி.. ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றமா?
எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை.. சபாநாயகரை சந்தித்த எஸ்.பி.வேலுமணி.. ஓபிஎஸ்-க்கு இருக்கை மாற்றமா?
சென்னை: எதிர்க்கட்சித் துணைத்தலைவர் இருக்கை விவகாரம் தொடர்பாக அதிமுக கொறடா எஸ்.பி.வேலுமணி சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு ஒதுக்க கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அதிமுக பொதுக்குழு கூட்டம் கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடத்தப்பட்டபோது, கட்சியில் இருந்து தங்களை நீக்கிய தீர்மானங்கள், பொதுச்செயலாளர் பதவி உருவாக்கியது, பொதுச்செயலாளர் தேர்தல் அறிவிக்கப்பட்டது ஆகியவற்றை ரத்து செய்யக் கோரி ஓ.பன்னீர்செல்வம் தரப்பு உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் தாக்கல் செய்திருந்தது.
அந்த முடிவுகளுக்கு தடை கோரிய இடைக்கால மனுக்களை நீதிபதி குமரேஷ்பாபு மார்ச் 22-ம் தேதி விசாரித்து, தீர்ப்பை ஒத்திவைத்தார். இதனைத் தொடர்ந்து இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. நீதிபதி குமரேஷ்பாபு அளித்த தீர்ப்பில், பொதுக்குழு தீர்மானங்கள் மற்றும் பொதுச் செயலாளர் தேர்தல் ஆகியவற்றிற்கு தடை விதிக்க கோரி ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
பொதுச்செயலாளர் இபிஎஸ்
இதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிசாமி அதிமுகவின் பொதுச்செயலாளராக வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது. தீர்ப்புக்கு பின் அதிமுக தலைமை அலுவலகம் வந்த எடப்பாடி பழனிசாமிக்கு தொண்டர்கள் ஏராளமானோர் வாழ்த்து தெரிவித்தனர். இதன் காரணமாக அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டங்களில் ஈடுபடனர்.
ஓபிஎஸ் மேல்முறையீடு
இதனிடையே தனி நீதிபதி தடை விதிக்க மறுத்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்யப்பட்டதோடு, அந்த மனுவை அவசர வழக்காக விசாரிக்க வேண்டுமெனவும் கூறி சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது சபீக் அடங்கிய அமர்வில் ஓபிஎஸ் அணி தரப்பு முறையீடு செய்தது.
ஓபிஎஸ் இருக்கை மாற்றம்?
இதனால் எதிர்க்கட்சி துணை தலைவர் விவகாரத்தை மீண்டும் கையில் எடுத்து எடப்பாடி பழனிசாமி தரப்பு சபாநாயகருடன் விவாதித்து வருகிறது. இதனால் சட்டசபையில் ஓபிஎஸ் இருக்கை மாற்றப்படுமா என்ற கேள்வி எழுந்தது. அதிமுக பொதுக்குழு முடிவடைந்த பின், எதிர்க்கட்சி துணைத் தலைவராக அதிமுகவின் ஆர்.பி.உதயகுமார் நியமிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.