ஆளுநர் தமிழகத்தைவிட்டு ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை – ஆர்.எஸ்.பாரதி பேட்டி
ஆளுநர் ரவி ஒழுங்காக செயல்பட்டால் அவரை அனுமதிப்போம், இல்லையென்றால் தமிழ்நாட்டை விட்டு அவர் ஓடும் காலம் வெகு தொலைவில் இல்லை என திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் ஜூஜூவாடி மற்றும் மூக்கண்டப்பள்ளி பகுதிகளில் ஒசூர் மாநகர திமுக வடக்கு பகுதி கழகம் சார்பில் திராவிட மாடல் அரசின் இரண்டு ஆண்டு சாதனை விளக்க பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் ஓசூர் சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ், மாநகராட்சி மேயர் சத்யா ஆகியோர் கலந்து கொண்டு அரசின் சாதனைகள் குறித்து பேசினர். இந்த விழாவில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி திமுகவின் இரண்டு ஆண்டு கால சாதனைகளை விளக்கி பேசினார். அதனைத்தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலைமையில் நடைபெறுகிற திமுக மாடல் ஆட்சியை கிண்டல் செய்கிற வகையில் பேசி இருக்கிறார். அவர் முதலில் தேசிய கீதத்தை போட்டு கேட்க வேண்டும். தேசிய கீதத்தில் திராவிடம் என்ற சொல் உள்ளது. தேசிய கீதத்தை அவமதித்த குற்றத்திற்காக ஆளுநர் ஆளாகிறார்.
ஆளுநர் ஆளுநரின் வேலையை செய்ய வேண்டும். திமுக இவரை விட பெரிய ஆட்களை எல்லாம் பார்த்து பழக்கப்பட்டுள்ளது. அவர் ஒழுங்காக செயல்பட்டால் அவரை அனுமதிப்போம். இல்லையென்றால் உச்ச நீதிமன்றத்திற்கு சென்று அவருடைய போக்கை கண்டித்து, அவர் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொண்டு நாகாலாந்தில் இருந்து எப்படி அவர் தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தாரோ அதேபோல அவர் தமிழ்நாட்டை விட்டு ஓடும் காலம் வெகு தூரத்தில் இல்லை என தெரிவித்தார்.
இந்த சாதனை விளக்க பொதுக்கூட்டத்தின் போது ஓசூரில் சாரல் மழை பெய்தது மழையையும் பொருட்படுத்தாமல் ஏராளமான தொண்டர்கள் குடையுடன் அமர்ந்து பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.