அமைச்சர் உதயநிதிக்கு வாழ்த்தையும் கூறிவிட்டு.. பஞ்சாயத்து ஆகாமல் இருக்க சப்பைக்கட்டு கட்டிய காயத்ரி

சென்னை: தமிழகத்தின் இளைஞர் நலம் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு பாஜகவிலிருந்து இடைநீக்கப்பட்ட காயத்ரி ரகுராம் வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். தமிழகத்தின் 35 ஆவது அமைச்சராக உதயநிதி ஸ்டாலின் பதவியேற்றுக் கொண்ட நிலையில் அவருக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. அவர் கோபாலபுரம் இல்லத்தில் பாட்டி தயாளு அம்மாளை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

அது போல் சிஐடி காலனியில் உள்ள கனிமொழியின் இல்லத்திற்கு சென்று ராசாத்தி அம்மாளின் காலில் விழுந்தும் ஆசி வாங்குகிறார் உதயநிதி. இந்த நிலையில் உதயநிதிக்கு பல்வேறு தரப்பிலிருந்து வாழ்த்துகள் வரும் போதிலும் கண்டனங்களும் குவியத் தான் செய்கின்றன.

காயத்ரி ரகுராம் :

அந்த வகையில் காயத்ரி ரகுராம் திமுக அரசை குறை சொல்லிக் கொண்டே இருப்பார். அண்மையில் இவர் பாஜகவிலிருந்து 6 மாதங்களுக்கு இடைநீக்கம் செய்யப்பட்டார். இவர் திமுகவை சேர்ந்த முக்கிய புள்ளியை ஒரு பர்த்டே பார்ட்டியில் சந்தித்து பேசியதால்தான் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக பாஜக நிர்வாகிகளே தெரிவித்திருந்தனர்

தமிழக அமைச்சர்:

இந்த நிலையில் தமிழக அமைச்சராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: குத்துச்சண்டை வீரர்கள் சண்டைக்கு முன் கையுறைகளைத் தொடுவது “நான் உன்னை மதிக்கிறேன், இது தனிப்பட்ட வெறுப்பு இல்லை, சண்டையின் போது நான் விளையாட்டு வீரராக மட்டுமே இருப்பேன்” என்று பார்க்கிறேன். சண்டை முடிந்ததும், இரண்டு போராளிகள் ஒரே மாதிரியாக சாதாரண மனிதராக வாழ்கின்றனர்.

இறுதி வரை போராட்டம் :

ஆனால் அவர்கள் இறுதிவரை போராடுகிறார்கள். சிறந்த ஒருவர் மட்டுமே வெற்றி பெற முடியும். இரண்டு போராளிகள் ஒருவருக்கொருவர் மரியாதை காட்டுவதற்கான பொதுவான வழியாகும். இது ஆரோக்கியமான குத்துச்சண்டை. அந்த குறிப்பில் தமிழக இளைஞர் மற்றும் விளையாட்டு துறை அமைச்சருக்கு வாழ்த்துகள். இவ்வாறு தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

வாழ்த்துக்கள்:

திமுகவின் உதயநிதிக்கு திடீரென வாழ்த்து சொல்லியுள்ள காயத்ரி, அதற்காக ஒரு காரணத்தையும் கூறியுள்ளார். அதாவது ஆரோக்கியமான அரசியல், வாழ்த்துகளையும் விமர்சனங்களையும் ஒரு சேர அளிப்பது என்பதை சொல்லாமல் சொல்லியுள்ளார். பாஜகவின் அண்ணாமலை, நாராயணன் திருப்பதி உள்ளிட்டோர் வாரிசு அரசியலை கடுமையாக விமர்சித்து வரும் நிலையில் காயத்ரி ரகுராம் இப்படி வாழ்த்துக்களை கூறியுள்ளது பலருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தான் வாழ்த்து கூறியதற்கு ஒரு காரணத்தையும் கூறியுள்ளதைதான் நெட்டிசன்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு வாழ்த்துகள் என சிம்பிளாக சொல்லிவிட்டு செல்வதை விட்டுவிட்டு எதற்காக இப்படி நீட்டி முழங்க வேண்டும்? என்ற கேள்விகளை எழுப்பியுள்ளார்கள்.

திமுகவில் இணைவது எப்போது?

மேலும் சிலர் நீங்கள் எப்போது திமுகவில் இணைய போகிறீர்கள் என கேள்வி எழுப்பியுள்ளார்கள். ஏற்கெனவே திமுக பிரமுகருடன் ஒரு மணி நேரம் காயத்ரி ரகுராம் பேசியதாக பாஜக நிர்வாகிகளான அமர்பிரசாத் ரெட்டி உள்ளிட்டோர் விமர்சித்துள்ள நிலையில் தற்போது இவர் வாழ்த்து கூறியிருப்பதையும் பாஜக நிர்வாகிகள் விவாத பொருளாக மாற்றுவர் என கூறப்படுகிறது. இன்னும் சிலர் கட்சி வேறாக இருந்தாலும் அரசியல் நாகரீகம் கருதி வாழ்த்து சொல்லியுள்ளீர்கள் என பாராட்டியும் வருகிறார்கள். இதே போல் மற்றொரு ட்வீட்டில் தேசியம் என எழுதி அதில் பிரதமர் மோடி, அமைச்சர்கள் ராஜ்நாத் சிங், அமித்ஷா ஆகியோரின் படங்கள் உள்ளன. அது போல் மற்றொரு புறம் திராவிடம் என குறிப்பிட்டு அமைச்சர் உதயநிதி, முதல்வர் ஸ்டாலின், முன்னாள் முதல்வர் கருணாநிதி என குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *