அமெரிக்காவில் இதுவரையில் 163 இந்திய நிறுவனங்கள் ரூ.3.28 லட்சம் கோடி முதலீடு: 4.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கம்
புதுடெல்லி: அமெரிக்காவில் இதுவரையில் 163 இந்திய நிறுவனங்கள் ரூ.3.28 லட்சம் கோடியை முதலீடு செய்துள்ளன.
அமெரிக்காவில் இந்தியர்களால் நடத்தப்படும் நிறுவனங்கள் குறித்தும் அவற்றின் முதலீடு குறித்தும் ‘அமெரிக்க மண்ணில் இந்திய வேர்கள்’ என்ற தலைப்பில் இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஐஐ) ஆய்வறிக்கை வெளியிட்டுள்ளது.
அதில் “அமெரிக்காவில் இதுவரையில் 163 இந்திய நிறுவனங்கள் 40 பில்லியன் டாலர் முதலீடு செய்துள்ளன. டெக்சாஸ், ஜார்ஜியா, நியூ ஜெர்ஸி, நியூயார்க் உள்ளிட்ட அமெரிக்க மாகாணங்களில் அதிக அளவில் முதலீடு செய்யப்பட்டுள்ளன.
இந்நிறுவனங்கள் மூலம் அமெரிக்காவில் 4.25 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாகி இருக்கின்றன. மேலும் இந்நிறுவனங்கள் சமூக மேம்பாட்டு பங்களிப்பு திட்டத்தின் கீழ் அமெரிக்காவில் ரூ.1,500 கோடி செலவிட்டுள்ளன. தவிர, 1 பில்லியன் டாலர் (ரூ.8,200 கோடி) சார்ந்த ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளுக்கு செலவிட்டுள்ளன” என கூறப்பட்டுள்ளது.
இது குறித்து அமெரிக்காவுக்கான இந்திய தூதர் தரன்ஜித் சிங் சந்த் கூறுகையில், “இந்திய நிறுவனங்கள் அமெரிக்காவில் வேலைவாய்ப்புகளை உருவாக்குகின்றன. நான் என்னுடைய அமெரிக்கப் பயணங்களின்போது அங்கு செயல்படும் இந்திய நிறுவனங்களைப் பார்த்து ஆச்சரியப்படுவதுண்டு.
அந்நிறுவனங்கள் முதலீடு, வேலைவாய்ப்பு சார்ந்து மட்டுமல்ல உள்ளூர் மக்களின் வளர்ச்சியிலும் முக்கியப் பங்கு வகிக்கின்றன. உள்ளூர் பள்ளிகள், பல்கலைக்கழங்களுடன் இணைந்து அப்பகுதியின் மேம்பாட்டில் கவனம் செலுத்துகின்றன” என்றார்.