அடுத்தாண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில் அனைத்து துறை பெண்கள் மட்டுமே பங்கேற்கும் பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்த அரசு திட்டம்
புதுடெல்லி: அடுத்தாண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பில், பங்கேற்கும் படைப்பிரிவுகளில் அனைத்து மகளிர் ராணுவ படைப் பிரிவுகள் பங்கேற்க ராணுவ அமைச்சகம் விருப்பம் தெரிவித்துள்ளது.
இந்தாண்டு குடியரசு தினவிழா அணிவகுப்பு டெல்லியில் நடந்து முடிந்தபின், விழா நிகழ்ச்சிகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தை அரசுத்துறை விழாக்கள் அமைச்சகம் கடந்த பிப்ரவரி 7-ம் தேதி நடத்தியது. இதில் அனைத்து துறை அமைச்சகங்கள் மற்றும் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
ராணுவ அணிவகுப்பில் ஏற்கனவே பெண்கள் பங்கேற்றுள்ளனர். ராணுவ படைப் பிரிவுகளுக்கு பெண் அதிகாரிகள் தலைமை தாங்கி அணிவகுப்பை நடத்திச் சென்றுள்ளனர். ராணுவ படைப் பிரிவுகளில் முன்பு அதிகாரிகள் அந்தஸ்தில் மட்டுமே பெண்கள் தேர்வு செய்யப்பட்டு வந்தனர். தற்போது அக்னிப் பாதை திட்டத்தின் கீழ் வீரர்கள் அந்தஸ்தில் பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். எனவே முழுவதும் பெண்கள் அடங்கிய ராணுவ படைப்பிரிவுகள், பேண்ட் இசை குழுவினர் அணிவகுப்பில் பங்கேற்றால் சிறப்பாக இருக்கும் என இந்த கூட்டத்தில் கருத்து தெரிவிக்கப்பட்டது.
ராணுவ போலீஸ் படைப்பிரிவில் தற்போது 100 பெண்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். கடற்படையில் அக்னிப்பாதை திட்டத்தின் கீழ் 273 பெண்கள் மாலுமிகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதனால் இவர்களை டெல்லியில் அடுத்தாண்டு நடைபெறும் குடியரசு தினவிழாவில் பங்கேற்க செய்வதற்கான சாத்தியங்களை ராணுவ அமைச்சக அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.இதேபோல் மாநிலங்கள் மற்றும் அரசு துறைகள் சார்பில் இடம் பெறும் அலங்கார ஊர்திகள் மற்றும் இதர கலை நிகழ்ச்சிகளில் முற்றிலும் பெண்களை பங்கேற்க வைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.